வியாழன், 19 நவம்பர், 2020

மூக்குத்தி அம்மனை ஒழிக்காமல்......

 


முதலாளித்துவம் சிறப்பானது, ஆனால் சில கார்ப்பரேட் வணிகர்கள் தான் தவறானவர்கள் என்று படம் எடுத்தால் எந்தக் கம்யூனிஸ்ட்டும் நம்ப மாட்டார். ஜாதிய வன்கொடுமைகள் தான் தவறானவை. ஜாதியால் எந்தச் சிக்கலும் இல்லை என்று எந்த பெரியாரிஸ்ட்டும், எந்த அம்பேத்கரிஸ்ட்டும் கனவில்கூட நினைக்க மாட்டார்கள். சிங்களர்களின் ஆட்சி சிறப்பானது தான், அந்த ஆட்சியைச் செயல்படுத்தும் இராஜபக்சே போன்றவர்கள் தான் தவறானவர்கள் என்று எந்த ஈழவிடுதலை ஆதரவாளரும் யோசிக்கக்கூட மாட்டார்கள்.
“திரைப்பட உலகிலேயே முதன் முதலாக, இப்போது தான், இந்த மூக்குத்தி அம்மன் படத்தில்தான் கார்ப்பரேட் சாமியார்களையும், பக்தியின் அடிப்படையில் உருவான மூடநம்பிகைகளையும், மோசடிகளையும் விளக்கியுள்ளார்கள். பாமர மக்களையும் இந்தக் கருத்துக்கள் எளிதாகச் சென்று சேர்கின்றன”. என்று முற்போக்கு இயக்கங்களின் தோழர்கள் சிலர் நம்புகிறார்கள் என்பதைத்தான் மூக்குத்தி அம்மன் விமர்சனங்கள் புரிய வைக்கின்றன.
இன்று வரை தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டார் எனச் சொல்லிக்கொள்ளும் இரஜினி 1981 லேயே கழுகு என்ற படத்தில் நடித்தார். 1982 இல் மூன்றுமுகம் என்ற படத்தில் நடித்தார். இரண்டுமே சூப்பர்ஹிட் படங்கள். இரண்டிலுமே சாமியார்கள் தான் வில்லன்கள். அவற்றில் முக்குத்தி அம்மனைவிட மிக விரிவாகவே மூடநம்பிக்கைகளும், கார்ப்பரேட் சாமியார்த்தனங்களும் விளக்கப்பட்டன. 1987 இல் அன்றைய கனவு நாயகன் மைக் மோகன் நடித்து, தோழர் மணிவண்ணன் இயக்கத்தில் தீர்த்தக்கரையினிலே என்று ஒரு படம் வந்தது. மேல்மருவத்தூர் சாமியாரை அம்பலப்படுத்தியது. எம்.ஜி.ஆர்.படங்களிலேயே வலுவான சாமியார் எதிர்ப்புகள் வந்துள்ளன.
நான் ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. அண்மையில் ஓ.டி.டி. தளங்கள் வழியாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில்கூட சாமியார் வில்லன்களைப் பார்க்கலாம். ஓ.டி.டி.யில் சாக்ரெட் கேம்ஸ் போன்ற பல வெப் சீரியஸ்களில் கார்ப்பரேட் சாமியார் எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புகளைப் பார்க்கலாம்.
மேற்கண்ட படங்களும், மூக்குத்தி அம்மனும் மக்களிடையே பரப்பிய ஒரே முக்கியமான தகவல் என்ன தெரியுமா?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் / அவள் நல்லவர், ஆனால் சாமியார்கள் மோசமானவர்கள். கடவுள் நம்பிக்கை நல்லது. பக்தி அவசியமானது. ஆனால் மூடநம்பிக்கைகள் மட்டும் தவறானது.
இதைத்தான் இந்தப் படங்கள் இதுவரை, இன்றுவரை பரப்புகின்றன. கடவுளும், மதமும், பக்தியும் நமக்குத் தீங்கானவை அல்ல என்பதை மட்டுமே விளக்கிவரும் படங்களால் மக்களுக்கு என்றுமே விடுதலைச் சிந்தனை வராது.
1989 இல் திருச்சி பாத்திமாநகரில் பிரேமானந்தா என்று ஒரு பிரம்மாண்ட சாமியார் உருவானார். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டார். ஜக்கிகளுக்கு முன்பே உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் கிளைபரப்பி ஒரு கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்தார். தனது சீடர்களான 13 பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார். பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றார். 2011 இல் சிறையிலேயே மறைந்தார்.
பிரேமானந்தாவின் உருவாக்கம், அவரது மூடநம்பிக்கை மோசடிகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் என அனைத்துமே பல முற்போக்கு அமைப்புகளால் மக்களுக்கு வெட்டவெளிச்சமாயின.
அதன்விளைவாக மக்கள் சாமியார்களையோ, மூடநம்பிக்கைகளையோ புறக்கணித்து விட்டார்களா? பிரேமானந்தாவைவிடப் பெரிய பெரிய கார்ப்பரேட் மற்றும் ஜாதிச் சாமியார்களை உருவானார்கள். அந்தப் பிரேமானந்தாவுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்து உறுப்பினர்களே இன்று யாரோ வேறு ஒரு சாமியாருக்குப் பக்தர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், போராட்டங்கள் எல்லாம் வெறும் சாமியார்கள் எதிர்ப்புப் போராட்டங்களாகவே, சாமியார் எதிர்ப்புப் பிரச்சாரங்களாகவே இருந்தன.
ஆனால், பிரேமானந்தாவைப் பட்டி தொட்டியெல்லாம் அம்பலப்படுத்திய திராவிடர் கழகத் தோழர்களில் ஒருவர்கூட எந்தக் கார்ப்பரேட் சாமியார்களின் பக்தர்களாகவும் மாறியதில்லை. கடவுள் மறுப்பை முன்னிலைப்படுத்தியதால் தோழர்களாவது மதவாதிகளாகாமல் காப்பாற்றப்பட்டார்கள்.
ஒரு பெரியாரியக்கத் தோழர் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். கடவுள் என்ற தத்துவம் அழிக்கப்பட வேண்டும். இந்தியாவில் அந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தும் பார்ப்பனர்களை முதன்மை எதிரிகளாக வரையறுக்க வேண்டும். கடவுள் தத்துவத்தை அழிக்காமல், அந்தக் கடவுள் தன்மையைப் புனிதப்படுத்திக்கொண்டே சாமியார்களையோ, மூடநம்பிக்கைகளையோ ஒழித்துவிட முடியாது.
இந்த எளிய உண்மையை ஆர்.ஜே.பாலாஜி வரை அனைத்துப் பார்ப்பனர்களும் புரிந்துள்ளனர். நமக்குத்தான் புரியவில்லை. பார்ப்பனர்கள் நடத்தும் சில நெகட்டிவ் ப்ரமோஷன்களைக்கூட நாம் புரிந்துகொள்ளாமல் தான் இருக்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ்ஸே, பார்ப்பனர்களோ உண்மையாகவே இந்தப் படத்தை எதிர்க்க நினைத்தால் இந்தப்படம் வெளியாகியே இருக்காது. இதே தமிழ்நாட்டில் ஓ.டி.டி.தளத்தில் காட்மேன் என்ற இணையத்தொடரின் ட்ரைலரில் புணூல் அணிந்த ஒரு சாமியாரின் பித்தலாட்டம் காட்சியாக வந்தது. அதனால் அந்தத் தொடரே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
பெரியார் தெளிவாகச் சொல்லியுள்ளார்,
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” எனத் தொடங்குகிறார். அதன் அடுத்த வரிகளாகத்தான் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி“ என்கிறார். முதல் வரி முக்கியமானது. அதைத் தவிர்த்து அடுத்த வரிகளை முதன்மைப்படுத்துவது மக்கள் விடுதலைக்கு என்றுமே பயன்படாது. அதைத்தான் கடந்த கால நிகழ்வுகளும், வரலாறுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

அதி அசுரன்
Image may contain: 1 person, text that says 'மூக்குத்தி அம்மன்களை ஒழிக்காமல் பகவதி பாபாக்களை ஒழிக்க முடியாது! கடவுள் தன்மையை ஒழிக்காமல்- கடவுள் மறுப்பிலும், பார்ப்பன எதிர்ப்பை அடிப்படையாகக் கொள்ளாமல்- எந்தச் சாமியாரையும், எந்த மூடநம்பிக்கையையும் என்றுமே ஒழிக்க முடியாது! பார்ப்பன பாலாஜிகளுக்கு இந்த உண்மை தெரியும். நமக்கு ???'


Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..